Tuesday, September 25, 2007

தீப்பாய்ந்த மங்கம்மாள்!

சுமார் நாலு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரம் அருகில் நடந்ததாக நம்பப்படும் கதை. மங்கம்மாள் என்பவரும் அவர் கணவர் மங்கபதி என்பவரும் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வந்த அன்பான தம்பதிகள். மங்கபதி அவர்களின் பங்காளிகள் அவரது செல்வச் செழிப்பையும், வளமான வாழ்க்கையையும் கண்டு பொறாமை கொண்டார்கள். சூழ்ச்சி செய்து மங்கபதி அவர்களை ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் கொலை செய்தார்கள்.

இடுகாட்டில் மங்கபதியின் உடல் எரிக்கப்படும்போது அவரது துணைவியார் மங்கம்மாள் "தன் கணவரின் மரணத்துக்கு காரணமானவர்களை பழிவாங்குவேன்" என்று சபதம் ஏற்று கணவரின் சிதையில் உடன்கட்டை ஏறினார். ஜோதியாக மறைந்ததாகவும் சொல்கிறார்கள். மூடநம்பிக்கைகள் மலிந்திருந்த அந்த காலக்கட்டத்தில் உடன்கட்டை என்பது சமூகத்தில் அத்தியாவசியமானதாக கருதப்பட்டதும் மக்களால் சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாக இருந்திருக்கிறது.

மங்கம்மாள் - மங்கபதி இறந்த சில காலத்திற்குள்ளாகவே மங்கபதியை கொலை செய்த அவரது பங்காளிகள் ஒவ்வொருவராக அனைவருமே ஏதோ ஒரு முறையில் உயிரிழந்திருக்கிறார்கள். மங்கம்மாளின் உடன்கட்டை சபதமும் நிறைவேறியிருக்கிறது.

இச்சம்பவம் நிகழ்ந்து பல வருடங்கள் கழித்து காஞ்சிபுரத்துக்கு சில வணிகர்கள் வந்திருக்கிறார்கள். முத்து மற்றும் தங்க வியாபாரிகளான அவர்கள் காஞ்சிபுரத்தில் வந்த வேலையை முடித்து விட்டு மேற்குப் பக்கமாக பயணம் செய்திருக்கிறார்கள். பணம் கொழிக்கும் வியாபாரம் செய்யும் இதுபோன்ற வியாபாரிகளை குறிவைத்து கொள்ளைக்காரர்கள் கொள்ளை நடத்துவது வழக்கமே.

இரவுவேளை ஆகிவிட்டதால் எங்கேயாவது பாதுகாப்பாக தங்கவேண்டும் என்று அந்த வியாபாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்வையில் விளக்கெரிந்த ஒரு குடிசை தென்பட்டதாம். அந்த குடிசைக்கு சென்றவர்கள் அங்கிருந்த மஞ்சள் சேலை அணிந்த அம்மையார் ஒருவரிடம் தங்கள் நகை மூட்டையை கொடுத்து இன்று ஒரு இரவு மட்டும் குடிசைக்குள் வைத்து பாதுகாக்கும்படி வேண்டியிருக்கிறார்கள். அந்த அம்மையாரும் இவர்கள் வேண்டுகோளை ஏற்று இவர்கள் பசியாற உணவு படைத்து, தங்குவதற்கு திண்ணையில் போதிய இடவசதியும் செய்து தந்திருக்கிறார்.

பயண அலுப்பில் இருந்த வியாபாரிகள் அங்கேயே உறங்கி விட்டிருக்கிறார்கள். பொழுது விடிந்திருக்கிறது. கண்மலர்ந்த வியாபாரிகள் தாங்கள் ஒரு இடுகாட்டின் மத்தியில் படுத்திருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் நகை மூட்டை எங்கே என்று அச்சப்பட்டவர்கள் அது தங்கள் தலைக்கு அருகே பத்திரமாக இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இரவு தங்களை உபசரித்த அம்மையாரும், தங்கியிருந்த குடிசையும் எங்கே என்று குழம்பித் தவித்திருக்கிறார்கள். அருகிலிருந்த கிராமத்தில் சென்று விசாரித்தவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒரு வழியாக வியாபாரத்தை முடித்து அந்த வியாபாரிகள் குழப்பமான மனநிலையுடனேயே ஊர் திரும்பினார்கள்.

சில நாட்கள் கழித்து அந்த வியாபாரிகளில் ஒருவரின் கனவில் அதே மஞ்சள் சேலை அம்மையார் வந்து தன் பெயர் மங்கம்மாள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். தான் அந்த இடுகாட்டில் இருந்துகொண்டே அந்த கிராம மக்களுக்கு அருள்பாலிப்பதாகவும் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கனவினை நம்ப முடியாமல் குழம்பிப்போன அந்த வியாபாரி சக வியாபாரிகளுடன் இவரது கனவை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். வியாபாரிகள் மொத்தமாக சேர்ந்து அதே கிராமத்துக்குச் சென்று இந்த கனவினைப் பற்றி கிராமப் பெரியவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்த கிராமப் பெரியவர்களும் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதன்பிறகு வியாபாரிகள் ஒன்று சேர்ந்து இடுகாடு என்று சொல்லப்பட்ட அந்த இடத்தில் "தீப்பாய்ந்த மங்கம்மாளுக்காக" ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். வேகவதி ஆற்றங்கரையின் மேற்கே திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் அமைந்த அந்தக் கோயிலில் இன்னமும் மங்கம்மாள் தன் பக்தர்களுக்காக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். ஆண்டாண்டு ஆடி மாதம் மங்கம்மாள் கோயிலில் கூழ் ஊற்றப்படுகிறது. வருடாவருடம் சித்திரை பவுர்ணமி அன்று திருவிழா நடைபெறுகிறது.

மங்கம்மாளை தங்கள் குலதெய்வமாக இன்றும் வழிபட்டுவருபவர்கள் யார் தெரியுமா? மங்கம்மாளால் பழிவாங்கப்பட்ட அவரது பங்காளிகளின் வம்சாவழியினர் தான். தங்கள் குழந்தைகளின் முடியைக் காணிக்கையாக கொடுத்து காதுகுத்துதலை தங்கள் குலதெய்வத்தின் கோயிலில் தான் அந்த சமூகத்தினர் செய்வார்கள்.

"தீப்பாய்ந்த" என்ற வார்த்தை சட்டவிரோதமானது என்று அந்த சமூகத்தின் இளையதலைமுறையினர் கருதியதால் தற்போது "தீப்பாய்ந்த மங்கம்மாள் ஆலயம்" என்பதை மாற்றி "ஸ்ரீமங்கம்மாள் ஆலயம்" என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய செய்திகள் சமீபத்தில் ராணி வார இதழ் மற்றும் தினமலர் வாரமலரில் வெளிவந்திருக்கிறது.

0 comments: