Tuesday, September 25, 2007

ஊத்துக்காடு எல்லையம்மன்!

காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஒருவன் (சோழ சிற்றரசன் என்கிறார்கள்) ஒரு நாளைக்கு வேட்டைக்குப் போனான். அடர்ந்த வனம். வனத்துக்குள் நீண்டதூரம் சென்றுவிட்ட மன்னனுக்கு நாக்கு வறண்டுவிட்டது. அருகில் நீர்நிலை ஏதுமில்லை. தனக்கு துணையாக பாதுகாவலர்களை அழைத்து வராத மன்னன் பைரவன் என்ற பெயர் கொண்ட வேட்டைநாய் ஒன்றை மட்டுமே துணையாக அழைத்து வந்திருந்தான்.

நாக்கு வறண்டு மயக்க நிலைக்கு போய்விட்ட மன்னன் குதிரையை விட்டு இறங்கி ஒரு மரநிழலில் ஓய்வெடுக்கத் தொடங்கினான். மன்னனின் வேட்டைநாய் நீர்நிலை அருகில் இருக்கிறதா என்று தேடத்தொடங்கியது. மன்னனுக்கோ தான் உயிர் பிழைப்பதே கடினம் என்ற சந்தேகம் வரத்தொடங்கியது.

அந்த நேரத்தில் காட்டின் நடுவே ஓரிடத்தில் ஊற்று இருப்பதை பைரவன் கண்டுபிடித்தது. அந்த இடத்துக்கு மன்னனை அழைத்து வந்தது. மன்னன் நீர் அருந்த நீர்நிலையில் காலைவைத்தபோது நீர்நிலையின் மையத்தில் இருந்து எலுமிச்சை பழங்கள் வரிசையாக மன்னனை நோக்கி மிதந்து வந்தது. ஆச்சரியமடைந்த மன்னன் நீர் அருந்திவிட்டு வனத்தை விட்டு வெளியே சென்று சில வலைஞர்களை அந்நீர்நிலைக்கு அழைத்து வந்தான்.

நீர்நிலையின் நடுவே ஏதோ சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியால் தான் எலுமிச்சை பழங்கள் உருவாகி மிதந்து வருவதாகவும் மன்னன் நினைத்தான். வலைஞர்கள் நீர்நிலையின் மையத்தில் வலையைப் போட்டு இழுக்க வலையில் இருந்தது ஒரு அம்மன் சிலை.

அந்த அம்மன் சிலையை அந்த நீர்நிலையின் கரையிலேயே பிரதிஷ்டை செய்து மன்னன் வணங்கினான். காட்டுக்கு நடுவே ஊற்றில் இருந்து வந்த அம்மன் என்பதால் அந்தப் பகுதியை ஊற்றுக் காடு என மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அதுவே ஊத்துக்காடு என மருவியது. அந்த நீர்நிலையை கண்டுபிடித்தது பைரவன் என்ற வேட்டைநாய் என்பதால் பைரவனின் பெயரில் பைரவன் குளம் என்று அந்நீர்நிலை அழைக்கப்படுகிறது. இன்றும் ஊத்துக்காடுக்கு சென்றால் தாமரைப் பூக்கள் நிரம்பிய பைரவன் குளத்தை நீங்கள் காணலாம்.

இச்சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து மன்னனின் பாதுகாப்பாளர்களில் ஒருவராக பணியாற்றிய நாகல் என்பவரின் கனவில் அம்மன் வந்தார். “என்னை இந்த ஊத்துக்காடுக்கு கிழக்கு எல்லையில் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்தால் இந்த ஊர் எல்லையைக் காத்து நின்று மக்களுக்கு அருள்பாலிப்பேன்” என்று வாக்களித்தார். தன் கனவில் வந்த அம்மனின் ஆணையை ஏற்று நாகல் என்பவரால் 1600 வாக்கில் ஊத்துக்காடு எல்லையம்மனுக்கு ஆலயம் எழுப்பப் பட்டது.

கருவறையில் எல்லையம்மனுக்கு பெரிய சிலை இருந்தாலும் மன்னனால் கண்டெடுக்கப்பட்ட பழைய சிறிய சிலையும் அருகிலேயே இருக்கிறது.

ஊத்துக்காடு சென்னையிலிருந்து காஞ்சி செல்லும் வழியில் வாலாஜாபாத்துக்கு மூன்று கி.மீ முன்பாகவே இருக்கிறது. ஆடி மாதம் இந்த கோயிலுக்கு விசேஷம் என்றாலும் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தின் எல்லா பகுதி சிறுதெய்வங்களுக்கும் செய்யப்படும் முறையிலேயே இங்கேயும் பொங்கல் வைத்தல், ஆடு-கோழி பலியிடல் போன்ற வழிபாட்டுமுறை அமைந்திருக்கிறது. அர்ச்சகர்களாக பார்ப்பனரல்லாத சமூகத்தினர் பணியாற்றுகிறார்கள்.

எல்.ஆர். ஈஸ்வரி ஒரு பக்திப் பாடலில் 108 அம்மன் பெயர்களை வரிசையாக சொல்லுவார் இல்லையா? அதில் ஊத்துக்காடு எல்லையம்மனும் இருப்பார். ஊத்துக்காடு வாசிகள் இதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள் :-)

4 comments:

said...

என்னா லக்கிலுக்காரே ! உங்களே நாத்திகர்னுலே நினைச்சிருந்தேன் - இதென்ன புதுக்கதை - தமிழ் சாமின்னு - ஒன்னுமே புரிலே

said...

test

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in