Tuesday, September 25, 2007

வேம்புலியம்மன்

"என் புள்ளை சீரியஸா கெடக்குதே. அம்மா காப்பாத்தும்மா"

"என் பொண்ணுக்கு கல்யாணம் சீக்கிரமா ஆகணும்"

"ஆத்தா நான் பத்தாவது படிக்கிறேன். நல்லபடியா பாஸ் ஆகோணும்"

"எம்மவனுக்கு நல்ல வேலை கெடைக்கணும்"

"என்னோட வியாதியெல்லாம் தீர்ந்து நல்லபடியா ஆரோக்கியமா வாழணும்"

- பிரார்த்தனைகள் பலவகை. பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் எல்லாமே நிறைவேறி விடுகின்றதா என்ன?

அந்த வேப்பமரத்தின் கீழே பிரார்த்திக்கப்படும் பிரார்த்தனைகள் அனைத்துமே நிறைவேறிக் கொண்டிருந்தது. பிரார்த்தித்தவர்கள் விவசாயக் கூலிகள். அன்றாடங் காய்ச்சிகள். அப்பகுதி மக்களுக்கு அந்த வேப்பமரம் தான் கற்பகத்தரு.

சென்னை கிராமமாக இருந்த காலம் அது. சென்னைக்கு அருகில் பழவந்தாங்கல் என்கிற கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை வயல் பரப்பு. வயல்களுக்கு நடுவே அந்த வேப்பமரம். அந்த மரத்துக்கு கீழே நின்று என்ன பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறிவிடும் என்று அந்த கிராமத்து வாசிகளுக்கு நம்பிக்கை. அம்மரத்தையே அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள்.

ஒருநாள் காலை விவசாயி ஒருவர் அந்த விளைநிலத்தை உழுதுக் கொண்டிருக்கிறார். களைப்பேற்படும் போதெல்லாம் தூரத்தில் தெரியும் வேப்பமரத்தை பார்ப்பார். அம்மரத்தை பார்க்கும் போதெல்லாம் தன் தாயை பார்ப்பது போன்ற உணர்வு அவருக்கு. களைப்பு நீங்கி மீண்டும் உழைப்பார்.

உழுது கொண்டிருந்த போது கலப்பை எது மீதோ பட்டு சத்தம் எழுப்பியது. அப்பகுதியில் குன்றுகள் அதிகம். அதனால் விளைநிலங்களில் கூட பாறைகள் இருப்பது சகஜம். பாறை எதன் மீதோ கலப்பை மோதி விட்டது என்று நினைத்தவர் தன் பணியை தொடர ஆரம்பித்தார்.

வேலை முடிந்து கூழ் குடிக்க திரும்பியவர் நிலமெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ந்தார். கலப்பை ஒரு பாறை மீது மோதியதல்லவா? அந்தப் பகுதியில் இருந்து இரத்தம் ஊற்றெடுத்து வயலை சிகப்பாக்கிக் கொண்டிருந்தது. அக்கம் பக்கம் வயல்களில் வேலை பார்த்தவர்கள் ஓடிவந்து அந்த இடத்தை பார்வையிட்டார்கள். ஒரு கல்லில் இருந்து இரத்தம் வடிவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது.

ஒரு கிராமத்துப் பெரியவரின் ஆலோசனையின் படி அந்த கல்லை தோண்டி எடுக்க ஆரம்பித்தார்கள். என்ன அதிசயம்? அது கல்லல்ல... அம்மன்! இவ்வளவு நாளும் தங்களுக்கு வேப்பமரம் மூலமாக பிரார்த்தனைகள் நிறைவேறியதன் காரணத்தை கண்டு கொண்டார்கள். அம்மனை அந்த வேம்புவுக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்கள்.

இன்று வரை வேம்புலியம்மன் பழவந்தாங்கலில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் கேட்பதை தங்குதடையில்லாமல் வழங்கிக் கொண்டிருக்கிறார். வேம்புலியம்மன் திருக்கோயிலுக்கு செல்ல வேண்டுமானால் சென்னைக்கு அருகில் இருக்கும் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.

0 comments: